பெண்களின் மார்பகங்கள் பற்றிய கவலைகள்…!

பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.


பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.

தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்‌ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.

சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.

சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.

பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.

மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!