பாகிஸ்தான் தலீபான்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாரா சாண்டர்ஸ்…!


ஆப்கானிஸ்தானில் நடந்த ஓட்டல் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று கொண்ட தலீபான்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினன்டல் சொகுசு ஓட்டலில் பயங்கரவாதிகள் கடந்த வாரம் அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர்.

இந்த தாக்குதல்களில், வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏதும் அறியாத அப்பாவி மக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்டு உள்ளது.

இந்த நிலையில், தலீபான் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கூடுதல் அழுத்தம் கொடுத்து உள்ளது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தலீபான் தலைவர்களை பாகிஸ்தான் கைது செய்ய வேண்டும் அல்லது அங்கு இருந்து உடனே வெளியேற்ற வேண்டும்.

தலீபான் பயங்கரவாதிகள் தனது நாட்டில் இருந்து செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். சாரா சாண்டர்ஸ் நிருபர்களை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளையும், அவர்களது புகலிடங்களையும், ஆயுத தொழிற்சாலைகளையும் படைகள் ஒழித்துக்கட்டி விட்டன.

இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தருகிறது என்று எங்களைப் பார்த்து சொல்கிறவர்கள், அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். இதை ஒரு பகிரங்க சவாலாக சொல்கிறேன்.

10 மாதங்களாக நாங்கள் ஆதாரத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தானில் எந்த குகையிலாவது பயங்கரவாதிகள் இருந்தால் காட்டுங்கள். நாங்கள் தீர்த்துக்கட்டுகிறோம்” என்று குறிப்பிட்டார். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH