வறண்ட கூந்தலை சரி செய்ய சில வழிகள் இதோ…!

கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ…


சிலருக்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும். மேலும் கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ…

வாரம் ஒருமுறை கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின் 3 சொட்டுகள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 3 சொட்டு தேங்காய் எண்ணெய், 1 கப் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை ஸ்பிரே போன்று பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி, அமினோ அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை வறண்ட கூந்தலை மென்மையாக்கும். தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

இரவில் ஊறவைத்த ஒரு கப் வெந்தயத்தை மைபோல் அரைத்து 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும், பொலிவானதாகவும் மாற்றும். தயிர் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும். வெந்தயம் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன் கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். தலைமுடியின் வேர்ப்பகுதியில்படும்படி அக்கலவையை தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.

எலுமிச்சை பழச்சாறு கரிசலாங்கண்ணி சாறு அரை லிட்டர் பால் ஆகியவற்றை ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய்யில் சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையை காய்ச்சி வடிகட்டி தலை முடியில் தடவினால் வறண்ட முடி மென்மையாகும். இளநரை வராது. முடி நீண்டு, அடர்த்தியாக வளரும்.

முட்டையின் வெள்ளைக்கருவை சிறிதளவு, ஆலிவ் எண்ணெயில் கலந்து கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனி வரை தடவவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!