பலரது கவனத்தை ஈர்த்த பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் வேலைக்காரப்பெண்!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வீட்டு வேலைக்காரப் பெண், பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளார்.

கலிதா மாஜி என்ற அந்த பெண்மணிக்கு வயது 32. நான்கு வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து, மாதம் ரூ.2 ஆயிரத்து 500 மட்டுமே சம்பாதிக்கிறார். இவரது கணவர் ஒரு குழாய் பழுதுநீக்குபவர். ஒரே மகன், 8-ம் வகுப்பு படிக்கிறான். கணவர், குழந்தையுடன் குடிசையில் வறுமைச்சூழலில் வாழ்ந்தாலும், கலிதா மாஜிக்கு அரசியல் ஆர்வம் அதிகம். கடந்த 2018-ம் பஞ்சாயத்து தேர்தலிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

கலிதா மாஜியின் அரசியல் நாட்டத்தை அறிந்த பா.ஜனதா கட்சி, இவருக்கு இந்த சட்டசபை தேர்தலில் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, வீட்டு வேலைக்கு ஒரு மாத ‘விடுப்பு’ எடுத்துக்கொண்டு, தேர்தல் களத்தில் சூறாவளியாய் சுற்றுச் சுழன்று வருகிறார், கலிதா மாஜி. தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் சூளுரைக்கிறார். ஆஸ்கிராம் தொகுதியில் நடப்பு எம்.எல்.ஏ.வாக இருப்பவர், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபேதானந்த தாண்டர். இந்த தொகுதிக்கு, 6-வது கட்டத்தில் ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாய தேர்தல் திருவிழாவில் உற்சாகமாகப் பங்கேற்றுள்ள கலிதா மாஜி, பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளார். பிரதமர் மோடியும் இவரை பாராட்டத் தவறவில்லை.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‘சுயகவுரவத்தோடு உழைத்து வாழும் கலிதாஜி, சேவையாற்றும் தனது உறுதியால் சமூகத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

கலிதா மாஜிக்கு ‘சீட்’ கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, சால்டோரா தொகுதியில் போட்டியிடுவதற்கு ஒரு தொழிலாளியின் மனைவிக்கு பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!