பக்கவாதம் பாதித்த தந்தையை வீட்டில் சேர்க்க குடும்பத்தினர் மறுப்பு..!

கடன் தொல்லையால் நிலத்தை விற்றுவிட்டு யாரிடமும் சொல்லாமல் பெங்களூரு சென்றவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பினார். ஆனால் அவரை குடும்பத்தினர் சேர்த்துக்கொள்ள மறுத்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா காடு கொத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவராமு (வயது 55). இவரது மனைவி பிரபாவதி. இந்த தம்பதிக்கு அக்‌ஷய் என்ற மகனும், அம்ருதா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சிவராமு தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பெங்களூருவில் வசித்து வந்தார். 15 ஆண்டுகளாக பெங்களூருவில் இருந்து வந்த சிவராமு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது கை, கால்கள் செயலிழந்தன.

இந்த நிலையில் அவர் சொந்த ஊரான காடு கொத்தனஹள்ளிக்கு வந்தார். அங்குள்ள தனது வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். ஆனால் அவரை குடும்பத்தினர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தனது வீட்டின் அருகில் படுத்த படுக்கையாக கிடக்கிறார்.

இருப்பினும் அவரது மனைவி, பிள்ளைகள், சிவராமுவை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதுபற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் கூறுகையில், சிவராமுவுக்கு 5 ஏக்கர் நிலம், சொந்த வீடு இருந்துள்ளது. ஆனால் அதிகளவில் கடன் வாங்கிய சிவராமு, கடன் தொல்லையில் சிக்கினார். இதனால் தனது 5 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.

இதனால் பிரபாவதி, தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து கரை சேர்த்துள்ளார். இந்த நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சிவராமு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தான் அவரை அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சேர்க்கவில்லை என்று கூறினர். தன்னை குடும்பத்தினர் வீட்டில் சேர்க்க வேண்டும் என்றும், எனது உயிர் இந்த வீட்டில் தான் போக வேண்டும் என்றும் சிவராமு உருக்கமாக கூறி வருகிறார்.

இது குறித்து சிவராமுவின் மகன் அக்‌ஷய் கூறுகையில், 15 ஆண்டுக்கு முன்பு எங்கள் தந்தை எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் பெங்களூரு சென்றுவிட்டார். இதனால் நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தோம். தற்போது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதும் இங்கே வந்துள்ளார். மனைவி, பிள்ளைகளை பற்றி கவலைப்படாமல் பெங்களூரு சென்றவர் இப்போது எதற்காக இங்கே வந்துள்ளார். அவரை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்வது? என்றார்.

இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!