வேலைக்கு ஆள் வைத்து கடைகளில் பட்டு சேலைகளை திருடிய கள்ளக்காதல் ஜோடி.!

10 பேரை வேலைக்கு வைத்து, கடைகளில் பட்டு சேலைகளை திருடிய கள்ளக்காதல் ஜோடி அவற்றை குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். கோவையில் போலீசாரிடம் சிக்கிய அந்த கும்பல் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கண்காணிப்பு கேமராவால் சிக்கினர்

கோவை ராமநாதபுரத்தில் மோகன்ராஜ் என்பவரது கடையில் சேலை வாங்குவதுபோல நடித்து 3 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் பட்டு சேலைகளை திருடிச்சென்றது. அவர்கள் பட்டு சேலைகளை திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து மோகன்ராஜ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் உமா உத்தரவின்பேரில் தெற்கு உதவி கமிஷனர் ராஜ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பட்டு சேலைகளை திருடிய கும்பல் குறித்து விசாரணை நடைபெற்றது.

அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் சோதனை செய்தபோது, அவர்கள் ஏற்கனவே காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திருடி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பதும், கோர்ட்டில் ஆஜராகாமல் கோவையில் பல்வேறு ஜவுளிக்கடைகளில் கைவரிசை காட்டி வந்துள்ளதும் தெரியவந்தது.

பெண் உள்பட 3 பேர் கைது

இதனையடுத்து தேனி மாவட்டம் கம்பத்தில் பதுங்கி இருந்த முருகன் (வயது 51), மணிவாசகம் (41), தனலட்சுமி (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, கோவைக்கு கொண்டு வந்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்த கும்பலுக்கு தலைவர்களாக செயல்பட்டவர்கள் முருகன் மற்றும் அவருடைய நண்பர் லட்சன் ஆவர். இவர்கள் சேலைகளை திருடுவதற்காகவே 10 பேரை வேலைக்கு வைத்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளிக்கடைகளில் சேலைகள் வாங்குவது போல நடித்து திருடி வந்துள்ளனர்.

விலை உயர்ந்த பட்டு சேலைகள்

இந்த நிலையில் திடீரென லட்சன் இறந்துவிட்டார். இதனையடுத்து லட்சனின் மனைவி தனலட்சுமிக்கும், முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. லட்சனுக்கு பதிலாக தனலட்சுமியை கூட்டாளியாக முருகன் சேர்த்துக்கொண்டார்.

கள்ளக்காதல் ஜோடி தலைமையில் பட்டு சேலை திருட்டு தொழில் கொடிகட்டி பறந்துள்ளது. பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தம்பதி போல செல்லும் இவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மதிப்புள்ள பட்டு சேலைகள் பக்கம்கூட திரும்பி பார்ப்பதில்லை.

ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உள்ள விலை உயர்ந்த பட்டு சேலைகள்தான் இவர்களின் குறி. இவர்கள் ஒரு கடையை தேர்ந்தெடுத்த பின்னர் அதிகாலையிலேயே அந்த பகுதிக்கு காரில் சென்று விடுவார்கள். கடை திறந்த உடனே கடைக்கு சென்று உயர் ரக பட்டு சேலை வாங்குவதுபோல நடித்து பட்டு சேலைகளை திருடிவிடுவார்கள்.

போலீசார் அதிர்ச்சி

கம்பத்தில் முருகன், தனலட்சுமி ஆகியோர் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது ‘திருமண சேலைகளை விற்பனை செய்பவர்கள் வீடு தானே. அதோ அங்கு உள்ளது’ என்று கூறியது போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது.

கடைகளில் சேலைகளை திருடிய 10 நாட்கள் போலீசார் தங்களை தேடுகிறார்களா? என்று காத்திருப்பார்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் 11-வது நாளில் மிகப்பெரிய பார்ட்டி வைத்து கும்மாளம் அடிப்பார்கள்.

அப்படி 11-வது நாளில்தான் போலீசார் கம்பத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். வீட்டுக்குள் பார்ட்டி கொண்டாட்டம் நடைபெற்றபோது போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வசமாக மாட்டிக்கொண்டதை அறிந்த அவர்கள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

மேலும் பலருக்கு வலைவீச்சு

அந்த வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஜவுளிக்கடலே இருந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டு சேலைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் என்று போலீசார் கூறினர். இவர்களது வீட்டில் திருமண பட்டு சேலை வாங்க சுற்றுப்புற மக்கள் எப்போதும் குவிந்து இருப்பார்கள்.

ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் ரூ.5 ஆயிரத்துக்கும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் ரூ.7 ஆயிரத்துக்கும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் ரூ.10 ஆயிரத்துக்கும் விற்றுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!