கேரள மாநிலத்திலுள்ள பாலமுருகன் கோயிலில் எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் அதிசய நிகழ்வு…!


பழனியில் முருகன் கோயில் பஞ்சாமிர்தம் போல் கேரள மாநிலம், ஆலப்புழா நகரின் புறநகர் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகவும், பிரசாதமாகவும் ‘மன்ச்’ சாக்லேட் பிரபலமாகி வருகிறது.

கேரள மாநிலம், ஆலப்புழா நகரின் புறநகர் பகுதியில் உள்ள சுப்ரமணியபுரத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு தெற்கு திசையில் அமைந்துள்ளதால் இந்த ஆலயத்தை உள்ளூர் மக்கள் தெக்கன்பழனி கோயில் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்துமத தெய்வங்களுக்கு மிகவும் பிடித்த பொருட்களாக ஐயப்பனுக்கு நெய், கிருஷ்ணருக்கு வெண்ணெய், விநாயகருக்கு லட்டு என்று இருப்பதுபோல் இங்குள்ள பாலமுருகனுக்கு மிகவும் பிடித்தமான பண்டமாக ‘மன்ச் சாக்லேட்’ பிரசித்தியாக உள்ளது.

இதற்கு பின்னணியாக சுமார் 8 ஆண்டுகளுக்கு நிகழ்ந்ததாக ஒரு சம்பவத்தை உள்ளூர் மக்கள் விவரிக்கின்றனர். இந்த பாலமுருகன் ஆலய வளாகத்தில் எட்டாண்டுகளுக்கு முன்னர் விளையாடி கொண்டிருந்த ஒரு இஸ்லாமியர் குடும்பத்து ஆண் குழந்தை அங்குள்ள ஆலய மணியின் கயிற்றை பிடித்து, மணியை ஒலிக்க வைத்துள்ளது.

இதை கண்டு பதறிப்போன பெற்றோர் குழந்தையை கண்டித்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அன்றிரவில் இருந்து கடுமையான காய்ச்சலுக்கு உள்ளான குழந்தை ‘முருகா, முருகா’ என்று தன்னையும் அறியாமல் முணுமுணுக்கத் தொடங்கவே மறுநாள் குழந்தையின் பெற்றோர் இந்த கோயிலுக்கு வந்து பூசாரியிடம் நடந்த விபரத்தை கூறினர்.

எண்ணெயும், புஷ்பங்களும் பரிகாரமாக அளித்தால் நல்லது என்று பூசாரி அறிவுறுத்தினார். பெற்றோரும் குழந்தையுடன் சென்று அவ்வாறு செய்த வேளையில் கருவறைக்கு சென்ற குழந்தை தனது கையில் இருந்த ‘மன்ச்’ சாக்லேட்டை பாலமுருகனுக்கு அளித்து மகிழ்ந்தது.

இதையடுத்து, குழந்தையை பீடித்திருந்த காய்ச்சல் உடனடியாக நீங்கவே, இந்த ஆலயத்தில் உள்ள முருகனுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் ‘மன்ச்’ சாக்லேட்தான் என்ற செவிவழி செய்தி பரவ ஆரம்பித்தது.

இதையடுத்து, இந்த பாலமுருகன் ஆலயத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் பெட்டிப்பெட்டியாக ‘மன்ச்’ சாக்லேட்களை வாரிவந்து நேர்த்திக்கடனாக செலுத்தி செல்கின்றனர். பரீட்சை வேளைகளில் கைகளில் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து வேண்டுதல் செய்யும் மாணவ-மாணவியர்களை அதிகமாக காணலாம்.

மேலும், சிலர் பெரிய பித்தளை கொப்பறை சட்டிகளில் மன்ச் சாக்லேட்களை நிரப்பியும், பலர் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியமைக்காக எடைக்கு எடை ‘மன்ச் துலாபாரம்’ செலுத்தியும் தங்களது நன்றியறிதலை பாலமுருகனுக்கு செலுத்தி செல்கின்றனர்.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களின் வாயிலாக பரவத் தொடங்கிய பின்னர் ஆலப்புழா மாவட்டம் தவிர, கேரள மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து பாலமுருகனின் அருளை பெற்று செல்கின்றனர். இங்குவரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் மன்ச் சாக்லேட்களையே பிரசாதமாக பெற்று செல்கின்றனர். – Source: maalaimalar

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05