மும்பை ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சுயேச்சை எம்பி..!


தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மோகன் டெல்கர். இவர் அந்த தொகுதியிலிருந்து 7 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்த இவர், கடந்த 2019 ஆண்டு மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்தநிலையில், 58 வயதான இவர், மும்பையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மும்பை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர் வேலை சம்பந்தமாக மும்பைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், மோகன் டெல்கர், உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை போலீஸார், “எம்.பி. மோகன் டெல்கரின் உடல், மரைன் டிரைவ் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்றுவருகிறது. பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர். எம்.பி. ஒருவர் ஹோட்டலில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: nakkheeran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!