உக்ரைனில் நெகிழ்ச்சி – புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்..!


உக்ரைனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை அந்நாட்டு போலீசார் நிறைவேற்றி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செர்னிவ்ட்சி என்ற நகரத்தில் மார்த்தா லெவ்சென்கோ என்ற தன்னார்வலர் ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகத்தை நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் அலக்சாண்டர் அண்டிரிசக் என்ற 10 வயது சிறுவன் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறான்.

இந்த சிறுவனுக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவன் அலக்சாண்டர், தான் ஒரு போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக ஒருமுறை மார்த்தாவிடம் தெரிவித்துள்ளான். இதனை மார்த்தா தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அவரது பேஸ்புக் பக்கத்தை உக்ரைன் போலீசார் பார்த்துள்ளனர். இதையடுத்து சிறுவன் அலக்சாண்டர் குறித்த தகவல்களை தெரிந்து கொண்ட பின்னர், அவனது ஆசையை நிறைவேற்றி வைக்க உக்ரைன் போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, சிறுவன் தங்கியிருக்கும் காப்பகத்திற்கு முன்பு திரளாக போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அதிலிருந்து இறங்கிய போலீசார் சிறுவன் அலக்சாண்டருக்கு போலீஸ் சீருடை, பெயர் பட்டை அகியவற்றை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் அலக்சாண்டரை போலீஸ் ரோந்து வாகனத்தில் ஏற்றிச் சென்று, அவனது முதல் ரோந்து பணியை மேற்கொள்ள வைத்தனர். இதன் மூலம் சிறுவனின் போலீஸ் கனவு நிறைவேறியுள்ளதாக காப்பக உரிமையாளர் மார்த்தா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் உக்ரைனில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!