காதலித்து கரம் பிடித்த கணவரின் விபரீத முடிவால் தவிக்கும் சிறுமி..!


போலீஸ் விசாரணை மற்றும் கைதுக்கு பயந்து கணவர் தற்கொலை செய்து கொள்ள, கையில் கைக்குழந்தை, வயிற்றில் இன்னொரு குழந்தையை சுமந்து கொண்டு சிறுமி காப்பகத்தில் ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

திருமண வயது பூர்த்தி ஆகாத நிலையில் காதலனுடன் அவசரத்தில் ஓட்டம் பிடித்த சிறுமி ஒருவரின் வாழ்க்கை இன்றைக்கு விடை தெரியாமல் போய் நிற்கிறது. போலீஸ் விசாரணை மற்றும் கைதுக்கு பயந்து அவரது கணவர் தற்கொலை செய்து கொள்ள, கையில் கைக்குழந்தை, வயிற்றில் இன்னொரு குழந்தையை சுமந்து கொண்டு அந்த சிறுமி காப்பகத்தில் ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஒற்றை செல்போன் அழைப்பு அவரது மொத்த வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது.

திருச்சி துறையூர் ஜம்புநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). துருதுருவென இருக்கும் இந்த சிறுமி தனது 15 வயதிலேயே காதல் வயப்பட்டார். பக்கத்து ஊரை சேர்ந்த பிரசாந்த் (வயது 27) என்ற இளைஞரின் காதல் வலையில் சிக்கி கொண்டார். இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்தனர்.

பெற்றோர்களுக்கு வி‌ஷயம் தெரியவந்து கண்டித்தனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுலோச்சனா தனது காதலனுடன் திடீரென ஓட்டம் பிடித்தார். பின்னர் உறவினர்களுக்கு தெரியாமல் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இதில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் மீண்டும் அந்த சிறுமி கர்ப்பம் தரித்தாள். இதையடுத்து கணவர் பிரசாந்த் மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த நர்சுகள் சுலோச்சனாவின் ஆதார் எண் இருந்தால் தமிழக அரசு வழங்கும் ரூ.24 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர்.

ஏற்கனவே உறவுகளின் ஆதரவு இல்லாமல் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்த பிரசாந்த் அந்த பணத்திற்கு ஆசைப்பட்டு ஜம்புநாதபுரத்தில் உள்ள தனது மாமியாரின் செல்போனுக்கு பேசி சுலோச்சனாவின் ஆதார் எண்ணை கேட்டுள்ளார். இதில் உஷாரான அவரின் பெற்றோர் உடனே இதுபற்றி ஜம்புநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் திருப்பூர் சென்று சுலோச்சனாவை மீட்டு ஜம்புநாதபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து அவரது கணவனையும் விசாரணைக்கு சம்மன் அனுப்பி அழைத்தனர்.

இதற்கிடையே சுலோச்சனாவிற்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என தெரிகிறது. இதையடுத்து பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதனால் பயந்துபோன பிரசாந்த் அந்த போலீஸ் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயமடைந்த அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

காதலிக்கும்போது வீரவசனம் பேசிய காதலன் போலீசாரின் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்தது கண்டு சுலோச்சனா நிலை குலைந்தார். அவரிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிரசாந்த் கேட்காமல் துயர முடிவை எடுத்துவிட்டார்.

கைக்குழந்தையுடன் தவித்த சுலோச்சனாவை திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் அவரின் பெற்றோர் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

கைக்குழந்தை, வயிற்றில் இன்னொரு குழந்தையை சுமந்து கொண்டு அந்த சிறுமி காப்பகத்தில் தவித்து கொண்டிருக்கிறார். கணவரின் சகோதரர் உதவியுடன் சுலோச்சனாவின் நாட்கள் நகர்ந்து வருவதாக காப்பகத்தை சேர்ந்த ஒருவர் வேதனை தெரிவித்தார்.

இதற்கிடையே சுலோச்சனா வழக்கினை கையாண்ட ஜம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபி திருச்சி ஆயுதபடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுபற்றி திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறும் போது, சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியிலான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு விசாரிப்பார். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.

எது எப்படியோ, அவசர காதல் திருமணம் எந்த அளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதற்கு சுலோச்சனாவின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக அமைந்து விட்டது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!