தொண்டர்கள் வரவேற்பில் ஜெயலலிதாவையே விஞ்சிடுவாரோ சசி..?


கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து சென்னை வரும் சசிகலாவுக்கு தொண்டர்கள் கொடுத்துள்ள வரவேற்பை பார்த்தால் ஜெயலலிதாவையே விஞ்சிவிடுவார் போலிருக்கிறது.

கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்தவர் சசிகலா. இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். இந்த நிலையில் அவர் கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா தற்போது கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு 6 அடி உயர வேல் வழங்கப்பட்டது.

அவருக்கு ஓசூரின் ஜூஜூவாடி பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழிநெடுகிலும் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டன. தமிழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அமமுக தொண்டர்களும் திரண்டனர்.

மேலும் சசிகலாவுக்கு ராட்சத மாலை அணிவித்தனர். தமிழக எல்லையில் செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தொண்டர்கள் வரவேற்றனர். மேலும் ஆரத்தி தட்டுகளுடன் பெண்களும் திரண்டனர். இந்த நிலையில் ஜூஜூவாடி பகுதியில் பெண்கள் பால்குடம் எடுத்தனர்.

இந்த வரவேற்புகளை எல்லாம் பார்த்தால் சசிகலாவுக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கும் என்றே தெரிகிறது. இது போல் பால்குடம் எடுப்பது, பூத்தூவுவது, கும்ப மரியாதையுடன் வரவேற்பு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், இவையெல்லாம் 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு நடந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபோது ஜெயலலிதா போல் புடவை அணிந்து கொண்டு நெற்றியில் திலகம் இட்டு கொண்டு சிகை அலங்காரத்தையும் மாற்றியிருந்தார். அன்று ஜெயலலிதா போல் அலங்காரம் செய்து கொண்ட சசிகலாவுக்கு இன்று ஜெயலலிதாவுக்கு கிடைப்பது போன்ற மரியாயதையும் உற்சாக வரவேற்பும் கிடைத்துள்ளது. இதை பார்க்கும் சசிகலா முகத்தில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி கலை தாண்டவமாடுகிறது. போக போக ஜெயலலிதாவை விஞ்சும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடுவாரோ சசிகலா?-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!