எந்திரன் கதை திருட்டு வழக்கில் பிடிவாரண்ட்டா.? – இயக்குனர் சங்கர் அதிர்ச்சி


எந்திரன் கதை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளாக ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குனர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. இதற்கு இயக்குனர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!