கால் வலி சிகிச்சைக்கு சென்ற 5 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..!


பள்ளிக்கரணையில் கால் வலி சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் இறந்தானா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ராஜேஷ் நகர் முதல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.எம்.ஸ்ரீதர். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் நவீன் (வயது 5). வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனுக்கு ஆணிக்கால் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவனுக்கு காலில் அதிக வலி ஏற்பட்டு தாங்கமுடியாமல் அழுததால், உடனே பெற்றோர் சிறுவனை பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது, அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு பெற்றோரும் சம்மதித்துள்ளனர். இதையடுத்து சிறுவனை அறுவை சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் திரும்பி வந்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை கேட்ட அவனது பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்து, மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் காரில் சிறுவனின் உடலை ஏற்றி கொண்டு பெற்றோருடன் அருகிலுள்ள இன்னொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுவனின் உறவினர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரிடம், சிறுவன் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதைத்தொடர்ந்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுவனுக்கு அதிக மயக்கமருந்து அளித்ததால் இறந்தானா? அல்லது தவறான சிகிச்சையால் இறந்தானா? என்பது குறித்து தெரியவரும் என்றும், அதன் பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

அதே போல் சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் ரியாஸ் (வயது 6). இவருக்கு கடந்த மாதம் 24-ந் தேதி தொண்டை வலி ஏற்பட்டதால் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளித்து தொண்டை வலி சரியாக வராததால், மீண்டும் கடந்த 27-ந் தேதி வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இறந்துவிட்டதாக நாகராஜன் வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!