காதணி விழாவுக்கு சென்றபோது நடந்த விபரீதம்… தம்பதி உள்பட 3 பேர் பலி..!


காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். காதணி விழாவுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

திருப்பூரை அடுத்த வீரபாண்டி, கல்லாங்காடு பகுதியை சேர்ந்த திம்மையன் என்பவரின் மகன் முத்துராஜா (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பட்டன் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கிருபா (24). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லை.

கிருபாவின் அக்காள் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள செல்லப்பட்டியில் வசித்து வருகிறார். அவருடைய குழந்தைக்கு காதணி விழா நடத்த முடிவு செய்து இருந்தனர். இந்த காதணி விழாவில் கலந்து கொள்ளுமாறு முத்துராஜா, அவருடைய மனைவி கிருபா, கிருபாவின் தங்கை பிரியா (17) ஆகியோருக்கு கிருபாவின் அக்காள் அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து காதணி விழாவில் கலந்து கொள்ள முத்துராஜா, அவருடைய மனைவி கிருபா, கிருபாவின் தங்கை பிரியா ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர்.

காங்கேயம் பகவதிபாளையம் பிரிவு அருகே நேற்று நள்ளிரவு 12.15 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்கு முன்னால் ஒரு சரக்கு ஆட்டோவும், அதற்கு முன்னால் ஒரு அரசு பஸ்சும் சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிரே சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரி வலது புறமாக வேகமாக வந்துள்ளது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அரசு பஸ் டிரைவர், பஸ்சை ஓரமாக ஓட்டினார். அதேபோல் சரக்கு ஆட்டோ டிரைவரும் பதற்றம் அடைந்து சரக்கு ஆட்டோவை சாலையின் ஓரமாக திருப்பினார். அதற்குள் அந்த லாரி அரசு பஸ்சை உரசியவாறு, முத்துராஜா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் முத்துராஜா, அவரது மனைவி கிருபா, கிருபாவின் தங்கை பிரியா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முத்துராஜா மற்றும் கிருபா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காங்கேயம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துராஜா, கிருபா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கோர விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி உட்பட 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!