செல்ல நாய் மரணம்… நியாயம் கேட்டு போராடும் பாசக்கார பெண்..!


தவறான சிகிச்சையால் உயிரிழந்த தனது நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரி, உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, கால்நடைத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த சுமதி தாக்கல் செய்த மனுவில், தான் வளர்த்து வந்த ஒன்பது வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போது, கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமா நிலையை அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

பின் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து, கடம்பத்தூர் மருத்துவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்ததாகவும், அதன் பின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் தனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டதாகவும், அதன் காரணமாக தனது நாய் கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நாயின் மரணத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பிப்ரவரி 1ம் தேதிக்குள் மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசு மற்றும் கால்நடைத் துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!