ட்ரம்ப்புக்கு டைமிங் ‘நோஸ்கட்’ கொடுத்த சிறுமி கிரெட்டா..!


இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், ட்ரம்ப்பை கலாய்த்து பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது

எவ்வளவு கலாய்ப்பை தான் டிரம்ப் தாங்குவார் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நமக்கே பரிதாபம் ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் எனும் சிறுமி பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த செய்தியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஐ.நா. சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்ச மாநாட்டில் பிச்சி உதறிய கிரெட்டா, “நான் இங்கு இருக்க வேண்டியவளே அல்ல; கடலுக்கு அந்தப் பக்கம் பள்ளியில் இருந்திருக்க வேண்டும். எங்கள் குழந்தை பருவத்தையே திருடிவிட்டீர்கள், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்?” என்று பேசியது ஐ.நா தாண்டி உலக அளவில் எதிரொலித்தது.
‘How dare you’ என்ற அவரது வார்த்தை உலகளவில் டிரெண்டிங் ஆனது.

அதே மாநாட்டில் கலந்து கொள்ள டிரம்ப் உள்நுழைந்த போது, அவரை முறைக்கும் விதமாக கிரெட்டா பார்த்த வீடியோவும் பட்டி தொட்டியெங்கும் வைரலானது.

இதை பெரிதுப்படுத்தாமல் டிரம்ப் அப்படியே விட்டுருக்கலாம். ஆனால், சாவகாசமாக வீட்டிற்குச் சென்ற பின் தனது ட்விட்டரில், “ஒரு பிரகாசமான, அருமையான எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒரு மகிழ்ச்சியான இளம் பெண்ணாக அவர் காட்சி அளிக்கிறார். பார்க்க நன்றாக இருக்கிறது!” என்று நக்கலாக டீவீட்டினார் டிரம்ப்.

அதுமட்டுமின்றி, “அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்த பயிற்சி எடுக்க வேண்டும். Chill greta, Chill..” என்றும் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் அவ்வப்போது இருவருக்கும் ட்வீட் போர் ஏற்படுவதை காண முடிந்தது. அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது பதட்ட நிலையில் டிரம்ப் சில டிவீட்களை தட்ட, Chill Donald, Chill..! என்று பதிலடி கொடுத்தார் கிரெட்டா.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனல்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிபருக்கான மெரைன் ஒன் ஹெலிகாப்டரில் வெள்ளை மாளிகையை விட்டு காலி செய்தார்.

அப்போது, கடைசியாக அவர் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிரெட்டா, டிரம்ப்பின் பாணியிலேயே அவரை கலாய்த்துள்ளார். அதாவது, “ஒரு பிரகாசமான, அருமையான எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒரு மகிழ்ச்சியான முதியவராக அவர் காட்சி அளிக்கிறார். பார்க்க நன்றாக இருக்கிறது!” குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் இதுவரை ஒரு மில்லியன் பேர் இந்த பதிவுக்கு லைக்-கிட்டுள்ளனர்.

ஏற்கனவே, US Capitol-ல் தனது ஆதரவாளர்களின் வன்முறை, ட்விட்டர் கணக்கு நீக்கம், பேஸ்புக்கின் எதிர்ப்பு, தேர்தலில் தோல்வி, தோல்வியை ஒப்புக்கொள்ளாமை, புதிய அதிபர் பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமை என்று தனித்திருந்த டிரம்புக்கு இந்த பதிலடி ட்வீட் மேலும் ஒரு ‘ச்சை’ மொமெண்ட்டாகவே அமைந்துள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!