விடுதியில் பிளஸ்-2 மாணவருடன் பெற்றோர் விபரீத முடிவு..!


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தங்கும் விடுதியில் பிளஸ்-2 மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் குருவராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 55). இவர் குவைத், மஸ்கட் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இவரது மனைவி கலாவதி (48), மகன் சித்தார்த் (17). இவர் கோவையில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

மகன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்ததால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி, மகனுடன் தங்கினார்.

நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் ராஜபாளையம் வந்து அங்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள்.

இரவு சுமார் 11 மணியளவில் ஜனார்த்தனன், தனது நண்பர் ஒருவரிடம் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு தானும் அங்கு விரைந்து வந்தார்.

போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, ஜனார்த்தன ராஜா மற்றும் சித்தார்த் ஆகியோர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர். கலாவதி இறந்துகிடந்தார்.

உயிருக்கு போராடிய தந்தை, மகன் 2 பேரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜனார்த்தனன், சித்தார்த் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

போலீஸ் விசாரணையில் 3 பேரும் அமோனியம் சல்பேட் என்ற வி‌ஷ மருந்தை உட்கொண்டு இறந்தது தெரியவந்தது.

3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. கடன் தொல்லையால் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

3 பேரும் தற்கொலை செய்த அறையில் கடிதம் சிக்கியது. அதில், “நாங்கள் கடவுளிடம் செல்கிறோம். லேப்டாப், செல்போன்களையும், உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்து விடவும். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து உறவினர்களிடம் ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொங்கல் விடுமுறையில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!