இந்தோனேசிய விமானத்தின் விமானி குறித்து வெளியாகிய பரபரப்பு தகவல்கள்


விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான கருப்பு பெட்டி சிக்கியது விமானத்தில் ஏறுவதற்கு விமானி முன்பு அலங்கோலமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று கடந்த 9 ந்தேதி புறப்பட்டு சென்றது.

ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இருக்குமிடம் தெரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் விமானத்தின் சக்கரம் போன்று தெரியும் ஒரு பாகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலில் மோதிய ஸ்ரீவிஜய ஏர் விமானத்தில் இருந்து கருப்பு பெட்டிகளில் ஒன்றை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த கருப்பு பெட்டி ஜகார்த்தாவின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக செய்தித் தொடர்பாளர் பஜார் ட்ரை ரோஹாடி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

விபத்து நடந்த கடற்பகுதியில் இருந்து மனித உடல் பாகங்களும், விமான பாகங்களும் மீட்புப் பணியாளர்களிடம் கிடைத்து வருகின்றன.

கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன.

விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால், தேடுதலின் போது சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடையாளம் காண உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் மற்றும் டிஎன்ஏ-க்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது 54 வயதான விமானி அஃப்வான் என்பவர், இவர் முன்னாள் விமானப்படை விமானி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக மிகவும் நேர்த்தியாக பணிக்கு செல்லும் அஃப்வான், சம்பவத்தன்று விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு, அவரது சட்டை சலவை செய்யப்படவில்லை, என்று அவரது மருமகன் ஃபெர்சா மகார்திகா கூறினார்.

குழந்தைகளை பிரிந்து பணிக்கு செல்வதற்காக தனது மூன்று குழந்தைகளிடம் அஃப்வான் மன்னிப்பு கேட்டார் என ஃபெர்சா மகார்திகா கூறினார். மேற்கு ஜாவா நகரமான போகோரில் விசிக்கும் அஃப்வான், தனது சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கு உதவ விரும்பும் கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்லீம் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.அவர் ஒரு நல்ல மனிதர். அவர் அடிக்கடி அறிவுரைகள், புத்திசாலித்தனமான ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். அவரது உதவும் குணத்திற்கு நன்கு அறியப்பட்டவர் என்று அவரது மருமகன் கூறினார்.இந்த விபத்து செய்தி கேட்டு நான் அதிர்ந்துபோனேன், இதை என்னால் நம்ப முடியவில்லை. தயவுசெய்து மாமாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!