2 ஆயிரம் கோடி லஞ்சம்… சீன நிதி நிறுவன தலைவருக்கு தூக்கு..!


சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவர் லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர். சீன அரசால் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹூராங் சொத்து மேலாண்மை என்ற நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தவர் லாய் சியாமின். இவர் தனது 10 ஆண்டுகால பதவி காலத்தில் 1.8 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,000 கோடி) லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து லாய் சியாமின் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தியான்ஜின் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் லாய் சியாமின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

சீனாவின் மிகப்பெரும் ஊழல் வாதியான இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பெறும் இழப்பை ஏற்படுத்தினார் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனிடையே லஞ்சம் வாங்குவது போன்ற நிதி குற்றங்களுக்காக மரண தண்டனை விதிப்பது முற்றிலும் மூர்க்கத்தனமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறி கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசியாவுக்கான இணை இயக்குனர் பில் ராபர்ட்சன் சீன அரசு இந்த மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!