சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலருக்கு இப்படியொரு தண்டனையா..?


சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்ஹத்லூ. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கிய ஒரு சில வாரங்களுக்கு முன்பு லூஜெய்ன் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், சவுதி அரேபியாவுக்கு விரோதமான அமைப்புடன் தொடர்பு வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

லூஜெய்ன் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சவுதி அரேபியா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் சவுதி அரேபிய அரசு அதனை பொருட்படுத்தாமல் அவரை சிறையில் அடைத்தது.

ரியாத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் லூஜெய்ன் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், பின்னர் அந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கியது. அதன்படி லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறையிலிருந்த 2 ஆண்டுகள் 10 மாதங்களை கழித்து எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக லூஜெய்னின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!