எலிசபெத் பெயரில் பேசி தொழிலதிபரிடம் 36 லட்சம் அபேஸ்.. சிக்கிய நைஜீரிய வாலிபர்..!


சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப்(48). இவர், ராயல் டிரேடிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் தொழில்தொடர்பான தகவல்களை பதிவு செய்து வந்தார். அந்த பதிவுகளை பார்த்த லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் மெசஞ்சர் மூலம் தொழிலதிபர் ஜோசப்பை தொடர்பு கொண்டு தன் மீது நம்பிக்கை வரும்படி பேசியுள்ளார்.

அப்போது அவர், மும்பையில் ரத்த புற்றுநோய் குணப்படுத்தும் போலிக் ஆயில் கிடைப்பதாகவும் அந்த ஆயிலை நீங்கள் எனக்கு வாங்கி அனுப்பினால் நான் பணத்தை கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு வாரத்துக்குள் ரூ.36 லட்சம் மதிப்புள்ள ஆயிலை வாங்கி அனுப்பினால் ரூ.42 லட்சம் தருவதாக கூறியுள்ளார். 6 லட்சத்திற்கு ஆசைப்பட்டு தொழிலதிபர் ஒவ்வொரு வாரமும் ஆயிலை வாங்கி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.

எலிசபெத் கூறியபடி மும்பையில் உள்ள சுனிதா என்ற பெண்ணிடம் பேசி அவரது வங்கி கணக்கில் ரூ.36 லட்சத்தை செலுத்தியுள்ளார். அத்துடன் பணம் அனுப்பியது குறித்து தகவல் தெரிவிக்க தொழிலதிபர் சுனிதா மற்றும் லண்டனில் உள்ள எலிசபெத்தை தொடர்பு கொண்ட போது அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது மும்பையில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று அம்மாநில போலீசாரின் உதவியுடன் நைஜீரியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் வில்மர் என்பவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!