திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய்… 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!


திருச்சி அருகே திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள தென்னூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருடைய 5 வயது மகன் யஷ்வந்த். நேற்று மாலை வீட்டின் அருகே சிறுவன் யஷ்வந்த் விளையாடி கொண்டிருந்தான். சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த அவன், அப்பகுதியில் திறந்துகிடந்த கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளான். அதனை அக்கம் பக்கத்தினர் யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. கால்வாயில் விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் கதறினர்.

இதனிடையே வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் சிறுவன் இறந்துக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி மாநகராட்சி மீது சிறுவனின் உறவினர்கள் கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். யஷ்வந்த்தின் தாய் நளினி, கால்வாயை மூடாமல் இருந்த மாநகராட்சியின் அலட்சியத்தினாலேயே தனது மகன் உயிரிழந்துவித்தாக கொடுத்த புகாரின் பேரில், தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை முகப்பேறு அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!