எல்லையில் தவிக்கும் லாரி டிரைவர்கள்… உணவு வழங்கும் சீக்கியர்கள்..!


இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சாலை முடப்பட்டதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தனது எல்லையை மூடியதால் இங்கிலாந்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லையில் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கே லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் நெகட்டிவ் என முடிவு வந்த நபர்கள் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறது.

இதனால், உணவு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லாரி டிரைவர்கள் தவித்துவந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் தங்கள் தொண்டு அமைப்புகள் மூலம் இருநாட்டு எல்லையில் சிக்கி பசியால் தவித்து வரும் லாரி டிரைவர்களுக்கு உணவு தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.

எல்லையில் சிக்கியுள்ளவர்களுக்கு தாங்களாகவே சமைத்து கொண்டுவருகின்றனர். மேலும், சில உணவகங்கள் சீக்கியர்களின் உதவியுடன் பீட்சா உள்ளிட்ட உணவுகளை டிரைவர்களுக்க்கு வழங்கி வருகின்றன.

சீக்கியர்களின் இந்த நற்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!