வியக்க வைக்கும் வினோத கலாசாரம்… ஆப்பிளுடன் சிறுமிக்கு திருமணம்..!


நேபாளத்தில் ஆப்பிளுடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத கலாசாரம் பல நூற்றாண்டுகளாக தொடருகிறது.

நேபாள நாட்டில் நேவார் அல்லது நேவா என்றொரு சமூகம் வாழ்ந்து வருகிறது. இவர்களது வழக்கப்படி, இந்த சமூக சிறுமிகளுக்கு வாழ்வில் 3 முறை திருமணம் நடைபெறுகிறது.

இதன்படி, சிறுமி பூப்பெய்துவதற்கு முன் இஹி அல்லது பெல்பிபாஹா என அழைக்கப்படும் திருமணம் முதன்முறையாக நடத்தப்படும். இதில் சிறுமிக்கு மர ஆப்பிளுடன் திருமணம் செய்து வைக்கப்படும். இந்த ஆப்பிளானது நாராயணனுக்கு சமம் ஆகும்.

இதன்பின்னர் பாஹ்ரா என்ற மற்றொரு திருமணம் நடைபெறும். இதுவும் சிறுமியின் பூப்பெய்தும் காலத்திற்கு முன்பே நடந்து விடும். இதில், சிறுமிக்கு சூரிய கடவுளுடன் திருமணம் செய்து வைக்கப்படும். இதற்கு குஃபா என்று பெயர்.

இதன்பின்பு இறுதியாக மனிதருடன் 3வது திருமணம் நடைபெறும. நேவா சமூக பெண்கள் விதவை ஆவதில்லை. ஏனெனில், அவர்களது வாழ்க்கையில் பிற்பகுதியில் கணவர் உயிரிழந்து விட்டாலும், விஷ்ணுவுடனும், சூரியனுடனும் அவர்கள் திருமணம் செய்த நிலையிலேயே தொடருவார்கள்.

2 நாள் நடைபெறும் இஹி சடங்கில், முதல் நாளில் துசலகிரியை சடங்கு நடத்தப்படும். இதில் சிறுமியை புனிதப்படுத்துவார்கள். அதன்பின்னர் பல்வேறு தேவதைகளை வணங்கும் பித் பூஜை, 3 தலைமுறை முன்னோர்களை வழிபடுதல், பூக்களால் மழையாக பொழிதல், 84 உணவு வகைகளை படைத்தல், உணவு உண்ணும் சடங்கு போன்ற சடங்குகள் கடைப்பிடிக்கப்படும்.

இதில் சிறுமிக்கு, சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் சேலை, சட்டை உள்ளிட்டவை கொண்டு மணமகள் போல் அலங்காரம் செய்யப்படும்.

2வது நாளிலும் புனிதப்படுத்துவதுடன் சடங்கு தொடங்கும். இதில் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து தந்தை, தனது மகளை கடவுள் விஷ்ணுவுக்கு கன்னியாதானம் கொடுத்திடுவார். இது மிக முக்கிய நாளாகும். இதன்பின்பு சிறுமிக்கு குங்குமம் வைத்தல் உள்ளிட்ட பிற முக்கிய சடங்குகளும் நடத்தப்படும்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி