கழிவறை யூஸ் பண்ண பக்கத்து வீட்டுக்கு போன அரச பெண் ஊழியர்… பறிபோனது உயிர்..!


காஞ்சிபுரம் அருகே, அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால் வேறு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்ற அரசு பெண் ஊழியர், கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா வயது 24. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வேளாண்மை துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லாதது குறித்து அதிகாரிகளிடமும் தனது குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று பணிக்குச் சென்ற சரண்யா சிறுநீர் கழிக்க அருகிலுள்ள வீட்டில் பின்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டிருக்கிறார்.

சரண்யா சென்று வெகுநேரம் ஆனதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பின்புறம் சென்று பார்த்தபோது சரண்யா கழிவுநீர் தொட்டியில் விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சரண்யாவை கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லாத அவல நிலையில், அரசு பெண் ஊழியர் வேறு இடத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!