செல்போன் சார்ஜர் வயரால் சிறுவனை கொன்ற தந்தை பகீர் வாக்குமூலம் !


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னச்சோழியம்பாக்கம் பகுதியில் முத்து(42) – நீலா(34) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்குக 11 வயதில் கார்த்திக் என்ற மகன் இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் படுகாயத்துடன் தவித்த சிறுவனை மீட்டு பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, மகன் கார்த்திக்கின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நீலா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சிறுவன் கழுத்தை நெரிக்கப்பட்டு கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனை கொலை செய்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். எந்த தடயமும் கிடைக்காத நிலையில், சிறுவனின் தந்தை அளித்த வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக இருந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, முத்து தான் தனது மகனை கொலை செய்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. மகன் கார்த்திக் அதிகமாக குறும்புத்தனம் செய்வது வழக்கம். இது முத்துவிற்கு பிடிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த முத்து தனது மகனை சரமாரி தாக்கி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

மகனை கொலை செய்ததாக முத்து மீது வழக்குப்பதிந்து கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!