கொரனாவின் கோர முகத்தை மறைத்த சீனா…. கசிந்த ஆவணங்கள்..?


சீனாவின் வூஹான் மாகாணம்தான், கரோனா தொற்றின் பிறப்பிடம் என்று இதுவரை நம்பப்பட்டுவரும் நிலையில், கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா வெகுவாகக் குறைத்துக் காட்டி, பேரிடரின் உண்மையான கோர முகத்தைக் காட்டாமல் மறைத்துள்ளது, சில ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா தொற்று பரவிய நாள் முதலே, சீனா பல உண்மைகளை மறைத்து வந்ததும், அந்த தொற்று உருவான விதம் பற்றிய ஆதாரங்களை அழித்தும், நாள்தோறும் கரோனா தொற்று பரவும் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் குறைத்தும் காட்டி வந்துள்ளது.

கரோனா தொற்றின் தீவிரம் குறித்து எடுத்துரைத்த மருத்துவர்களின் வாயை அடைத்ததோடு, இதுகுறித்து குரல் கொடுத்தவர்களின் குரல்வலையும் நசுக்கப்பட்டுள்ளது. சீனாவின் சில முக்கிய ஆவணங்கள் தற்போது ஆங்கில ஊடகங்களில் சகிந்துள்ளதாகவும், அதன் மூலமாக, இந்த தகவல்கள் வெளிவந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், கரோனா பெருந்தொற்றை அந்நாடு மிகமோசமாக கையாண்டதாகவும், பொதுத் தகவல்கள் மிகவும் தவறான எண்ணிக்கையைக் காட்டியதும், கரோனா பரிசோதனை முடிவுகள் மூன்று வார காலத்துக்குப் பிறகு கிடைக்கப்பெற்றதும், அதில் குறிப்பிடத்தக்கதாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் குரல்வலை நசுக்கப்பட்ட சில சமூக ஆர்வலர்கள் மூலம், ஹூபேய் மாகாணத்தின், தொற்று நோய் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புடைய 117 பக்க ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன.

அதில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படுவது என்னவென்றால்,
சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கரோனாவுக்கு 93 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டபோது, உண்மையில் அங்கு பலி எண்ணிக்கை 196 ஆக இருந்துள்ளது.

இவ்வளவையும் மறைத்துவிட்டு, சீனா கடைசியாக மற்றொரு வேளையையும் செய்திருக்கிறது. அதுதான், தனது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், 2019-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் இந்தியாவில்தான் இந்த கரோனா தொற்று உருவாகியிருக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது.

ஏற்கனவே, இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று உருவாகியிருக்கலாம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டியிருந்த சீனா, தற்போது இந்தியாவை நோக்கி தனது ஆள்காட்டி விரலை நீட்டியிருக்கிறது.- source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!