தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள் – அரியானாவில் நெகிழ்ச்சி!


போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள் உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள் உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அரியானா மாநில எல்லைகளில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவியது. பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் உணவு, தண்ணீர் கிடைப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சீக்கியர்கள் சிலர் போலீசாருக்கு உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் கர்னல் என்ற இடத்தில் ஏராளமான போலீசார் இருபுறமும் வரிசையாக அமர்ந்திருக்க, சீக்கிய குருத்வாரா தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மேலும் ஏராளமான போலீசார் அங்கு லத்தி, தடுப்புகளுடன் வந்து அமர்ந்து உணவு சாப்பிட்டு செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினாலும், அதை நினைக்காமல் தன்னார்வலர்கள் போலீசாருக்கு உணவு வழங்கியதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!