பெங்களூரு ஆஸ்பத்திரியில் இந்தி நடிகர் பராஸ் கான் திடீர் மரணம்..!


பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இந்தி நடிகர் பராஸ் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தி திரையுலகில் 1996-ம் ஆண்டு வெளியான ‘பராப்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பராஸ் கான் (வயது46). இவர் ‘பிரித்வி’, ‘லவ் ஸ்டோரி’, ‘மெஹந்தி’, ‘சந்த் புஜ்ஹ கயா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். டி.வி. தொடர்களிலும் நடித்துள்னார்.

இந்தநிலையில் நடிகர் பராஸ் கான் கடந்த ஒரு வருடமாக இருமல் மற்றும் நெஞ்சக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே நிதி நெருக்கடியால் தவித்த அவரது குடும்பத்தினர் பராஸ் கானின் சிகிச்சை செலவுக்காக நிதி திரட்ட தொடங்கினர். இதேபோல் நடிகை பூஜா பட் தனது டுவிட்டரில் இவரின் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இந்தி நடிகர் சல்மான் கான் பராஸ் கானின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நடிகர் பராஸ் கான் நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை இந்தி நடிகை பூஜா பட் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர், “நடிகர் பராஸ் கான் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். இந்த செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி. அவரது குடும்பத்துக்காக உங்களது பிரார்த்தனையையும், நம்பிக்கையும் தாருங்கள். அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப இயலாது” என்றார். இதேபோல அவரது மறைவுக்கு, திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!