34 மணி நேரத்துக்கு பிறகு துருக்கியில் 70 வயது முதியவர் உயிருடன் மீட்பு…!


துருக்கி நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் ஒருவர் நேற்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டார்.

துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இஸ்மிர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், படுகாயமடைந்த சுமார் 900 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கட்டிட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் ஒருவர் நேற்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் தாக்கிய 34 மணி நேரத்துக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!