விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவச்சென்ற போலீஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி


ஆந்திராவில் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக சென்ற போலீசார், விபத்தில் சிக்கிய காரில் 140 கிலோ கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதிய விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக உடனடியாக சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், போலீசார் வருவதற்கு முன்னரே விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பிச்சென்றதால் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தனர்.

அப்போது காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கார் விபத்துக்குள்ளானதால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பிச்சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!