மனைவி – மகனை கொன்று இலங்கை தமிழர் விபரீத முடிவு – பின்னணி என்ன….?


லண்டன் மாநகரில் மனைவி, மகனை கொன்று விட்டு, தமிழர் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில், லண்டன் மாநகரின் மேற்கு பகுதியில் பிரெண்ட்போர்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குகராஜ் சிதம்பரநாதன் (வயது 42) என்பவர் தனது மனைவி பூர்ணா காமேஷ்வரி சிவராஜ் (36), மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் தமிழ் குடும்பத்தினர் ஆவார்கள்.

இந்தநிலையில் திடீரென பூர்ணா பற்றி எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் அவரது உறவினர் கவலையோடு, லண்டன் பெருநகர போலீசை தொடர்பு கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். திங்கட்கிழமையன்று போலீசாரும் அந்த வீட்டாருடன் பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் போலீசார் அந்த குடியிருப்புக்கு சென்றனர்.

கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அங்கு பூர்ணாவும், அவரது மகன் கைலாசும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். குகராஜ் சிதம்பரநாதன் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவரும் இறந்து விட்டார்.

குடும்ப தகராறில் குகராஜ் சிதம்பரநாதன் ஆத்திரம் அடைந்து, மனைவியையும், மகனையும் கொலை செய்து விட்டு, தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி லண்டன் மாநகர போலீசின் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சைமன் ஹார்டிங் கூறுகையில், “இந்த வழக்கு விசாரணையின் ஆரம்ப கட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், பூர்ணாவும், அவரது மகன் கைலாசும் முதலிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், குகராஜ் சிதம்பரநாதன் தற்கொலை செய்து கொண்டதின் பின்னணி என்ன என்பது குறித்து எனது குழுவினர் விசாரிக்கின்றனர். ஆரம்ப கட்ட விசாரணையில் பூர்ணாவும், மகன் கைலாசும் சில நாட்களாக காணப்படவில்லை என தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும், “இந்த குடும்பத்தினர் அடிக்கடி தங்கள் நாயுடன் நடந்து செல்வதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். இந்த கொடூர சம்பவம், சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படுத்தி உள்ள பேரழிவை வார்த்தைகளால் கூறி விட முடியாது. இருப்பினும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதி அளிக்கிறேன்” எனவும் கூறினார்.

குகராஜ் சிதம்பரநாதன், பூர்ணா தம்பதியர் மலேசியா, இலங்கை தமிழ் குடும்பங்களை சேர்ந்த தம்பதியர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம், மேற்கு லண்டன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!