காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… விவசாயியை இழுத்து சென்ற ராட்சத முதலை..!


சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற விவசாயியை முதலை இழுத்து சென்றது. அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூரை சேர்ந்தவர் அறிவானந்தம் (வயது 53), விவசாயி. இவர் நேற்று இரவு பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த ராட்சத முதலை ஒன்று, குளித்துக் கொண்டிருந்த அறிவானந்தத்தின் காலை கடித்தது. இதில் பதறிய அவர் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என கூச்சலிட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதலை, அறிவானந்தத்தை தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீருக்குள் இறங்கி, முதலை இழுத்து சென்ற அறிவானந்தத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவானந்தத்தை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் இரவு நீண்ட நேரமாகவும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், அறிவானந்தத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அறிவானந்தத்தை தேடுவதற்கு படகு கொண்டு வரக்கோரி கிராம மக்கள் வேளக்குடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் விரைந்து வந்து, தற்போது மழை கடுமையாக பெய்வதாலும், இருளில் தேட முடியாது என்பதாலும் நாளை(அதாவது இன்று) காலை படகுகள் மூலம் தேடப்படும் என கூறினார். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிதம்பரம்-சீர்காழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!