கால்வாயில் குளித்த 2 வாலிபர்களுக்கு நடந்த பரிதாபம்..!


மதுரை அருகே கள்ளந்திரி கால்வாயில் குளித்த 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக பெரியார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள இரணியம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜன்பட்டியைச் சேர்ந்த கண்ணனின் மகன் சுந்தர் (வயது 26) கள்ளந்திரி கால்வாயில் தனது நண்பர் ஒருவருடன் குளிக்கச் சென்றார்.

அப்போது அவர் நீரின் வேகத்தால் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய சுந்தரை தேடினர். நீண்ட நேரம் போராடி ஒத்தப்பட்டி அருகே உள்ள எட்டமங்கலம் கால்வாயில் சுந்தர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதேபோல் அதே பகுதியில் குளித்த அடையாளம் தெரியாத 25 வயது வாலிபர் ஒருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளந்திரி கால்வாயில் கரையின் ஓரமாக குளிக்க வேண்டும். ஆழமான பகுதிகளுக்கு செல்ல கூடாது என்று ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி சிலர் ஆழமான பகுதிகளுக்கு சென்று உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் அங்கு குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஆழமான பகுதிக்கு செல்லக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!