பெற்ற பிள்ளைகளை கொலை… 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வக்கீல்..!


மகள், மகனை கொலை செய்துவிட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல் அடுத்த எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி(வயது 52). வக்கீலான இவர், காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். ரவி தனது மகள் ஐஸ்வர்ய பிரியதர்ஷினி (13), மகன் ஜெய கிருஷ்ணபிரபு (11) ஆகியோருடன் வசித்து வந்தார்.
வாடகைக்கு இருந்த அந்த வீட்டை காலி செய்வது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ரவி உடனடியாக வீட்டை காலி செய்துவிட்டு வீட்டை அதன்உரிமையாளரிடம் ஒப்படைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

கையில் போதிய பணம் இல்லாததால் தனது பிள்ளைகளை கவனிக்க முடியாமல் பரிதவித்து வந்த ரவிக்கு வீட்டையும் காலி செய்ய வேண்டியது இருந்ததால் தனது பிள்ளைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக 2015-ம் ஆண்டு தனது மகள், மகன் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்த ரவி, மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து அதில் இருவரும் இறந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக நீளமான துணியை சிலிண்டரில் கட்டி அதில் தீ வைத்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். ஆனால் தீ பாதியிலேயே அணைந்துவிட்டது.

3 நாட்களுக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் மதுரவாயல் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு இருவரும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். ரவி தலைமறைவானதுடன், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவியை இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, தலைமை காவலர் துக்கையன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் பெரியமேட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ரவியை, 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

போலீசாரிடம் ரவி அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது மகள், மகன் இருவரையும் கொலை செய்துவிட்டு காரில் ஒடிசா மாநிலம் சென்றேன். அங்கு காரை விற்றேன். அங்கேயே 4 ஆண்டுகள் தங்கி கூலி வேலை செய்து வந்தேன். பின்னர் அங்கிருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்று தங்கினேன்.

சில மாதங்களுக்கு முன்பு எனது சொந்த ஊரான சமயநல்லூருக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர். அதன்பிறகு எனது செல்போன் எண்ணை வைத்து என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!