உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி வைத்து காத்திருந்த பெண்..!


மலப்புரம் அருகே குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி வைத்து காத்திருந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வந்து விட்டார். இவர் குழந்தைகளுடன் எர்ணாகுளம் மாவட்டம், பரவூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். சாந்தி பரவூரில் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக சாந்திக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. சாந்தியின் 25 வயதுடைய மூத்த மகனும், இளைய மகளும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டிலிருந்து மருத்துவ உதவி பெற்று வருகின்றனர். இரண்டாவது மகன் ரஞ்சித்துக்கு வயிற்றில் ஒரு கட்டி ஏற்பட்டு அது அறுவை சிகிச்சை மூலம் நீக்கம் செய்யப்பட்டது. தற்போது வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார். இளைய மகன் பொருளாதார நெருக்கடியில் பிளஸ்-2 படிப்பை தொடர முடியவில்லை. கடைசி மகன் பிளஸ்-1 படித்து படித்து வருகிறார்.


இந்த நிலையில் மகன், மகளுடைய சிகிச்சை செலவுக்கு பலரிடம் இருந்தும் சாந்தி 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் தவித்துள்ளார். இந்த நிலையில் அவர் குடும்பத்தோடு எர்ணாகுளம் அருகேயுள்ள முளவுக்காடுபகுதிக்கு வந்தார்.

அங்குள்ள சாலையோரம் தார்ப்பாய் மூலம் கொட்டகை போட்டு தங்கி உள்ளார். அந்த கொட்டகை முன்பு ஒரு போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதில் தங்களது உடல் உறுப்புக்கள் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் இதயம், சிறுநீரகம் உள்பட பல்வேறு உறுப்புகளைபெற்றுக்கொள்ளலாம். கடனைத் தீர்ப்பதற்காகவும், வீட்டு வாடகை கொடுப்பதற்கும், குழந்தைகள் சிகிச்சை செலவுக்கும் வேண்டி இம் முடிவை எடுத்துள்ளேன் என்று சாந்தி எழுதி இருந்தார். இப்படி நூதன முறையில் போர்டு வைத்து சாந்தி தனது குடும்பத்துடன் சாலையோரமாக காத்திருந்தது, அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த முளவுக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அவர்களை சாலையிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் பேசினர். அந்த நிறுவனத்தினர் இவர்களது கடன்களை அடைத்து வீட்டு வாடகை பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அதன் பேரில் அவர்கள் மீண்டும் பரவூரில் உள்ள வாடகை வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், அந்த குடும்பத்துக்கு மருத்துவச் செலவில் உதவி செய்வதாக பரவூர் தொகுதி வீ.டி.சதீசன் எம்.எல்.ஏ., அங்கு வந்து ஆறுதல் தெரிவித்தார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!