கள்ளக்காதலால் நடந்த விபரீதம் – கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி..!


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). கூலி தொழிலாளி.

இவரது மனைவி சந்திரலேகா (30). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.மாமந்துரையை சேர்ந்தவர் மதிவாணன் (40). இவர் அடிக்கடி சிறுமங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதிக்கு வந்து சென்று வந்தார். அப்போது சந்திரலேகாவுக்கும், மதிவாணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விவரம் சக்திவேலுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவர் சக்திவேலை கொலை செய்ய சந்திரலேகா முடிவு செய்தார். இது குறித்து அவர் தனது கள்ளக்காதலன் மதிவாணனிடம் தெரிவித்தார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.


சம்பவத்தன்று இரவு சக்திவேல் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சந்திரலேகா, அவரது கள்ளக்காதலன் மதிவாணன் ஆகியோர் சேர்ந்து சக்திவேலின் கழுத்தை நெரித்தனர். சிறிது நேரத்தில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார். பின்னர் சக்திவேலின் உடலை அங்குள்ள ஏரியில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஏரிக்குட்டையில் சக்திவேல் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இது குறித்து வரஞ்சரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் சந்தேகத்ததின் பேரில் சந்திரலேகாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது கணவர் சக்திவேலை கள்ளக்காதலன் மதிவாணனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து சந்திரலேகா, மதிவாணன் மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சந்திரலேகாவின் தாய் அஞ்சலை (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.-Source: maalaimalar

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!