ரோகிங்யா முஸ்லிம்களை பலாத்காரம் செய்து கொன்று புதைத்தோம் – முன்னாள் வீரர்கள் பகீர் வாக்குமூலம்!


ரோகிங்யா முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்தது உண்மையே முன்னாள் வீரர்கள் பகீர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

மியான்மரில் கண்ணில்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் சுட்டுப் படுகொலை செய்தோம், பலாத்காரம் செய்து கொன்று புதைத்தோம் என்று அந்நாட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் இருவர் அளித்திருக்கும் வாக்குமூலம் உலகையே அதிர வைத்துள்ளது.

உலக நாடுகளை உலுக்கிய முதன்மையான சம்பவங்களில் ஒன்றாக மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலைகளை பார்க்கப்படுகிறது.ரோகிங்யாக்களை பயங்கரவாதிகளாக பிரகனப்படுத்தி மியான்மரை விட்டு துரத்திவிட்டது அந்த நாட்டின் நிர்வாகம்.

பல லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள்.அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கும் நடைபெறுகிறது.

ஆப்பிரிக்காவின் காம்பியா நாடுதான் இது தொடர்பாக வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜனநாயகப் போராளியாக புகழப்பட்ட ஆன்சான் சூகி, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அரசுக்காக அரசின் ஆலோசகராக நேரில் ஆஜரானது பல விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.

இந்த நிலையில் மியான்மர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 2 வீரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் திஹேக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ரோகிங்யாக்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும் புதைத்துவிடவும் உத்தரவு வந்ததாகவும் அதனடிப்படையில் ரோகிங்யா முஸ்லிம்களை படுகொலை செய்ததாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 2017 முதல் 700,000 க்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் மியான்மரை விட்டு அண்டை நாடான வங்காள தேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.பாதுகாப்புப் படையினர் கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகளைச் செய்து ஆயிரக்கணக்கான வீடுகளை எரித்தனர் என்ற குற்றச்சாட்டை மியான்மர் அரசாங்கம் மறுத்துள்ளது.

ஆனால் முன்னாள் ராணுவ வீரர்களான மியோ வின் துன்(33), மற்றும் ஜா நைங் துன்(30) ஆகிய இருவரும் மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த 19 நேரடி குற்றவாளிகளின் பெயர்களையும் அவர்களின் பதவிகள் தொடர்பான பட்டியலையும் வழங்கியுள்ளனர்.குறித்த பட்டியலில் தங்களையும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர். அத்துடன் ஆறு மூத்த தளபதிகள் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!