அக்னிதீர்த்த கடலில் மகாளய அமாவாசையன்று நீராட தடையா..?


வருகிற 17-ந் தேதி வரும் மகாளய அமாவாசையன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும், அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்யவும் தடை உள்ளது.

ராமேசுவரம் கோவிலில் கடந்த 1-ந் தேதியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி அன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை வருகிறது. ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசையை போன்று புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை என்பதும் மிகவும் விசேஷமானதாகும்.

மகாளய அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே வருகிற 17-ந் தேதி ராமேசுவரத்துக்கு பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந் தேதி மட்டும் அக்னி தீர்த்த கடலில் நீராடவும், கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேசுவரம் கோவிலில் இன்று இணை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் மகாளய அமாவாசை அன்று ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் நீராடவும், கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!