கொரோனாவால் பலியான தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த இளம்பெண்..!


மூடிகெரே அருகே கொரோனாவுக்கு பலியான தனது தந்தையின் உடலுக்கு இளம்பெண் இறுதிச்சடங்கு நடத்திய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா என்ற அரக்கன் பலரது வாழ்க்கையை புரட்டியெடுத்து வருகிறது. மேலும் பலரது உயிரை காவு வாங்கி அவர்களது குடும்பத்தினரை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விடுகிறது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா முக்கிரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், 45 வயது ஆண். இவர் ராமநகர் மாவட்டம் பிடதி அருகில் உள்ள டொயட்டோ நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். கொரோனா பரவலை தொடர்ந்து அந்த அதிகாரி, தங்களது மகள்களை சொந்த ஊரான முக்கிரஹள்ளிக்கு அனுப்பிவைத்திருந்தார். அவர், தனது மனைவியுடன் பிடதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த அதிகாரி, தனது மகள்களுக்கு செல்போனில் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு அந்த அதிகாரி மாரடைப்பால் இறந்துபோனார். இதை கேட்டு அவரது மனைவி, 2 மகள்களும் துக்கம் தாளாமல் கதறி அழுதனர். இதற்கிடையே இறந்துபோன அவரின் உடல் சொந்த ஊரான முக்கிரஹள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள மயானத்தில் அவரது உடலை சிவகிரி என்ற தன்னார்வ அமைப்பினர் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.

அப்போது இறந்துபோன அதிகாரியின் மூத்த மகள், தனது தந்தைக்கு தானே இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்க கோரினார். அதன்பேரில் தனது தந்தையின் இறுதிச்சடங்குகளை அந்த இளம்பெண் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நடத்தினார். தனது தந்தையின் உடல் மீது விறகு கடைகளை அடுக்கவைத்ததுடன் அவர் மண் குடம் சுமந்து தனது தந்தையின் சிதைக்கு தீவைத்தார்.

அப்போது இறந்துபோன அதிகாரியின் இரு மகள்களும் கண்ணீர் வீட்டு கதறி அழுதது உருக்கமாக இருந்தது. கொரோனாவுக்கு பலியான அதிகாரியின் சிதைக்கு அவரது மகள் தீமூட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இறந்துபோன அதிகாரி, அடிப்படையிலேயே பணக்காரர் என்ற போதிலும், அவர் உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!