எதிர்க்கட்சி தலைவர் குடித்த டீ-யில் விஷம் கலப்பு..? – கோமா நிலைக்கு சென்றதால் தீவிர சிகிச்சை..!


ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி குடித்த டீ-யில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், நவல்னி இன்று ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளத்திலேயே ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமா நிலைக்கு சென்றுள்ள அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக்கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நவல்னி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிரா யார்ம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நவல்னி காலை முதல் எந்த உணவும் சாப்பிடவில்லை. விமான நிலையத்தில் வைத்து டீ (தேனீர்) மட்டுமே குடித்தார். அவர் குடித்த டீ-யில் தான் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என கிரா தெரிவித்தார்.

நவல்னி குடித்த டீ-யில் விஷம் கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் காரணமாக என ரஷிய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!