கொரோனா – ஜலதோஷம் பாதித்தவர்களிடையே வாசனை சுவை இழப்பில் வித்தியாசம் என்ன?


வாசனையும், சுவையும் இழக்கிறபோது அதை சாதாரண ஜலதோஷம் என எடுத்துக்கொள்வதா அல்லது கொரோனா என கருதுவதா, இரண்டுக்கும் எப்படி வேறுபாடு காண்பது?

ஜலதோஷத்துக்கு மருந்து சாப்பிட்டால் 7 நாளில் குணம், மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் குணம் என்று வேடிக்கையாக ஒரு பழமொழி கூறப்படுவது உண்டு. மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடம் இருந்து விடைபெறும்.

விஞ்ஞானி காரல் பில்போட்

சாதாரண காலத்தில் ஜலதோஷம் வந்தால் மூக்கடைத்து விடுகிறது. வாசனையை நுகர முடிவதில்லை. நாக்கு சுவை இழக்கிறது. அதனால் தான் ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகிறவர்கள், “ நாக்கிற்கு சுவையே தெரியவில்லையே, எதைச் சாப்பிடு வது?” என அங்கலாய்ப்பது உண்டு.

இது கொரோனா காலம்.

கொரோனாவுக்கும் வாசனை இழப்பும், சுவை இழப்பும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் சாதாரணமாக ஒரு கேள்வி எழுகிறது. ஆனால் அது அர்த்தமுள்ள கேள்விதான்.

வாசனையும், சுவையும் இழக்கிறபோது அதை சாதாரண ஜலதோஷம் என எடுத்துக்கொள்வதா அல்லது கொரோனா என கருதுவதா, இரண்டுக்கும் எப்படி வேறுபாடு காண்பது?

-இதுதான் கேள்வி.

இந்த கேள்விக்கு விடை காணும் வகையில், இங்கிலாந்து நாட்டில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி உள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள், ‘ரைனோலஜி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

இது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறபோது, மூளையும் மத்திய நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகின்றன என்று கூறப்படுவதற்கு பலம் சேர்ப்பதாக அமைந்திருக்கிறதாம்.

விஞ்ஞானிகளில் ஒருவரான காரல் பில்போட் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் முக்கிய அடையாளம், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகும். இருப்பினும் இது மோசமான ஜலதோஷம் இருப்பதற்கான பொதுவான அறிகுறியும் ஆகும். கொரோனா மற்றும் சாதாரண ஜலதேஷம் இவ்விரண்டுக்கும் உள்ள வாசனை, சுவை இழப்புக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கண்டறிவதுதான் எங்கள் ஆய்வின் நோக்கமாக அமைந்தது” என்கிறார்.

கொரோனா நோயாளிகள் 10 பேர், மோசமான ஜலதோஷம் பாதித்த 10 பேர், ஆரோக்கியமான 10 பேர் ஆகியோரை இந்த விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வுக்கு பயன்படுத்தியது.

இந்த 30 பேருமே ஒரே வயதினர், ஒரே பாலினத்தவர் ஆவர். அவர்களிடம் வாசனை மற்றும் சுவை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பிற சுவாச வைரஸ்களுடன் கொரோனா வைரஸ் மாறுபட்டு செயல்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகப்படியான எதிர்வினைக்கு அதாவது சைட்டோகைன் புயலுக்கும், நரம்பு மண்டல பாதிப்புக்கும் ஆளாக்கப்பட்டது.

இதில், மற்றவர்களை ஒப்பிடுகிறபோது, கொரோனா நோயாளிகளிடம் வாசனை இழப்பு என்பது மிக மோசமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் வாசனையை அறியும் திறன் மிக மிக குறைவாகவே இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் கொரோனா நோயாளிகளால், கசப்பு மற்றும் இனிப்பு சுவைகளை அடையாளம் காண முடியவில்லை.

இதையொட்டி விஞ்ஞானிகள் கூறும்போது, “இதுதான் உண்மையான சுவை இழப்பு. இதுதான் கொரோனா நோயாளிகளுக்கும், சாதாரண ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என்கிறார்கள். இதுபற்றி விஞ்ஞானி காரல் பில்போட் கூறும்போது, “ இந்த சோதை-னைகள் உற்சாகம் அளிக்கின்றன. ஏனென்றால், கொரோனா நோயாளிகளுக்கும், சாதாரண ஜலதோஷம் பாதித்தவர்களுக்கும் இடையே வித்தியாசம் காட்ட பயன்படுத்த முடியும். இந்த சோதனைகள் தொண்டையில் அல்லது மூக்கில் இருந்து சளி மாதிரியை (ஸ்வாப்) எடுக்கும் சோதனைக்கு மாற்றாக இல்லை என்கிறபோதும், வழக்கமாக சோதனைகள் கிடைக்காதபோதும் அவசர கால துறைகளில் அல்லது விமான நிலையங்களில் இதை பயன்படுத்த முடியும்” என்கிறார். உண்மைதானே?- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!