ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்…. மிச்செல் ஒபாமா..!


ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என்பதை டிரம்ப் நிரூபித்து விட்டார் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் ஜோ பைடனை ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி அறிவிக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கியது.

4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளான நேற்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்தார். மிச்செல் ஒபாமா தனது உரையில் கூறியதாவது:-

நமது நாட்டின் தவறான ஜனாதிபதி டிரம்ப், அவரது வேலையை அவர் நன்றாக செய்வார் என்று எதிர்பார்த்து அவருக்கு போதிய கால அவகாசத்தை நாம் வழங்கி விட்டோம். இனியும் தர முடியாது. அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். நாம் யார் வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அவராக அவரால் செயல்பட முடியவில்லை. ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவு, சிந்தனை வேண்டும். அது அவருக்கு இல்லை. அடிப்படை தேவைகளுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

வாக்காளர்கள் ஜோ பைடனுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உங்களது தபால் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள். சரியாக பயன்படுத்துங்கள். நாட்டில் ஊழலை ஒழிக்க ஜோ பைடன்தான் சரியான தேர்வாக இருப்பார். நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்யக்கூடியது இந்த தேர்தல். நமது வாழ்க்கை இந்த தேர்தலை சார்ந்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!