சொந்த சகோதரிக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சகோதரர்..!


கேரளத்தில் சொத்துக்காக சொந்த சகோதரிக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சகோதரரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம் காசர்கோடு அருகே உள்ள அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்த பென்னி ஒலிக்கல்-பெஸ்ஸி தம்பதியினரின் ஆல்பின் பென்னி(22) மற்றும் ஆன் மேரி (16) என்ற மகள் என இரு குழந்தைகள்.

ஆல்பின் ஆட்டோமொபைல் மெக்கானிக் முடித்திவிட்டு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கரோனா பொது முடக்கத்தால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தவர் எப்போதும் அலைபேசியில் யாரிடமாவது பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனை பெற்றோர், சகோதரி கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஆல்பின் தனது சந்தோஷத்துக்கு தடையாக இருந்து வரும் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து கடைந்த ஜூலை 31 ஆம் தேதி கோழிக்கறில் எலி விஷ மருந்தை கலந்து பெற்றோர்களுக்கு கொடுத்துள்ளார். இதில் குறைந்தளவே விஷம் மருந்ததை கலந்ததால் வயிற்று வலியுடன் உயிர் தப்பினர்.
தனது கொலை முயற்சி பலனளிக்க அளிக்காததை அடுத்து வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்து அதில் விஷம் கலந்து தனது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதற்கு அவரது குடும்பத்தினரையே பயன்படுத்தியுள்ளார். அதாவது ஆல்பின் தனது தாய் பெஸ்ஸி மற்றும் சகோதரி ஆன் மேரியிடம் ஐஸ்கிரீம் தயாரித்து தருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து பத்தாம் வகுப்பைத் முடித்துவிட்டு, மேல்நிலைப் பள்ளியில் சேரக் காத்திருந்த சகோதரி ஆன் மேரி, ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக அங்குள்ள ஒரு பேக்கரியில் இருந்து பொருட்களை வாங்கி வந்துள்ளார். பின்னர் தாயும் மகளும் சேர்ந்து இரண்டு வகையான ஐஸ்கிரீம்களை தயாரித்துள்ளனர். அதில் ஒன்றை குளிர்சாதனப் பெட்டியின் ஒரு அறையிலும் மற்றொன்றை இரண்டாவது அறையிலும் வைத்துள்ளனர்.

அன்று மாலைக்குள், ஐஸ்கிரீம் தயாராக இருந்தது, “அதனை சகோதரியும், பெற்றோர்களும் சாப்பிட்டுள்ளனர், ஆனால் அல்பின் தொண்டை வலி இருப்பதாகக் கூறி சாப்பிடவில்லை.”

ஆல்பின் சகோதரி ஆன் மேரி சனிக்கிழமை (ஆக.1) காலை முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஹோமியோபதி மருத்துவமனைக்கும் பின்னர் வேலரிக்குண்டுவில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பல சோதனைகளுக்குப் பிறகு, அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவள் மெதுவாக இறப்பதை உணர்ந்த ஆல்பின், ஆகஸ்ட் 5 ஆம் தேதி செருபுஷாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் பெற்றோர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களும் செருபுழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இறந்த சகோதரியின் உடலை ஆல்பின் அடக்கம் செய்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களையும் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷ உணவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்பின் மட்டும் நலமாக இருப்பது காவல் துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆல்பினை அழைத்து விசாரணை நடத்திய காவலர்கள், அவரது அலைபேசியின் ஹிஸ்ட்ரியை தேடியபோது இணையதளத்தில் எலி மருந்து குறித்து தேடியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆல்பினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

தனது விருப்பம்போல் வாழவும், சொத்துக்கள் முழுவதும் தனக்கே வரவேண்டும் என்ற ஆசையில் பெற்றோர் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதற்காக ஜூலை 29 அன்று ஆல்பின் அங்குள்ள கடையில் இருந்து எலி மருந்ததை வாங்கியதும், அதன் பின்னரே தாய் மற்றும் சகோதரியிடம் ஐஸ்கிரீம் தயாரிக்கச் சொன்னதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குடும்பச் சொத்தை அபகரிப்பதற்காக, தனது 16 வயது சகோதரி ஆன் மேரி கொலை மற்றும் அவரது பெற்றோர்களை கொலை செய்ய முயன்றதற்காக ஆல்பின் பென்னியை வெள்ளரிக்குண்டு காவலர்கள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஆய்வாளர் கே. பிரேம்சதன் கூறுகையில், “ஆன் மேரியின் கொலை இரக்கமற்றது மற்றும் கொடூரமானது” என்று கூறினார்.

மேலும், “ஆல்பின் சதிப்படி எல்லாம் நடந்திருந்தால், மூன்று கொலைகளையும் தற்கொலை என்று சொல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்ததாகவும்,” ஆனால் அவரது “மிகவும் நேர்த்தியான ஒத்திகை திட்டத்தின்” படி எல்லாம் முழுமையாக பலன் அளிக்கவில்லை என்று கூறினார்.

தற்போது ஆன் மேரியின் தந்தையின் கல்லீரலில் 80% சேதமடைந்துள்ளதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் செலவாகும், மருந்துக்காக மாதம் ரூ.35 ஆயிரம் செலவாகும் என்று ஒரு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறினார்.

“ஆல்பின் இரக்கமின்றி ஒரு பார்வையாளரைப் போல நின்றுக்கொண்டு தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. பென்னி உயிர் பிழைத்தால் அது ஒரு அதிசயமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

பணம் இல்லாத நிலையில் உயிருக்கு ஆபத்தான பென்னி பயன்னூரில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, ஆன் மேரியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் மஞ்சள் பாஸ்பரஸ் – ரத்தோல் பேஸ்டின் என்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடின உழைப்பாளி விவசாயி பென்னிக்கு நான்கு ஏக்கர் நிலமும், ஒரு பன்றி பண்ணை, கோழி பண்ணை மற்றும் ரப்பர் மரங்கள் உள்ளன.

செத்துக்காக 22 வயது இளைஞர் ஒருவர் தன் குடும்பத்தையே விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் கேரள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.- source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!