துபாய் பட்டத்து இளவரசர் கொடுத்த காரில் பறவை குஞ்சு பொரித்தது..!

கூடுக்கட்டி வாழ்வதற்காக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கொடுத்த காரில் அடைகாத்து வந்த பறவை குஞ்சு பொரித்தது. இது குறித்து தனது மகிழ்ச்சியை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு காலங்களில் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். அதனால் அவரது வாகனங்கள் பல பயன்படுத்தாமல் இருந்து வந்தன.

இதில் சமீபத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனத்தின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு வைத்து முட்டையிட்டது. அதன் பிறகு அதில் அமர்ந்து அடை காக்க தொடங்கியது. இதனை பார்த்த பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார்.


மேலும் கூட்டை கலைக்கும் விதமாக அந்த வாகனத்தை சுற்றி பணியாளர்கள் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் சிவப்பு நிற டேப்பை நான்கு புறத்திலும் சுற்றி வைத்துள்ளார். அதில் அந்த பறவை தனது முட்டைகளை காரின் முகப்பு பகுதியில் அடை காத்து வந்தது.

ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் அந்த பறவையானது அடை காத்த முட்டைகளில் இருந்து 2 குஞ்சுகள் வெளியே வந்தது. அந்த குஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததும் தாய்பறவை முட்டை ஓட்டை அகற்றி, குஞ்சுகளுக்கு இரை தேடி தர தொடங்கியுள்ளது.

இதனை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ‘வாழ்க்கையில் சில நேரங்களில் சிறிய விஷயங்கள் அனைத்தையும் விட போதுமானதாக உள்ளது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவிற்கு பல தரப்பில் இருந்தும் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. பட்டத்து இளவரசரின் வாகனத்தில் இருந்து அந்த பறவை குடும்பம் இன்னும் அகலாமல் வாழ்ந்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!