மழையால் பாதிக்கப்பட்டோருக்கு கேரள பெண் செய்த நெகிழ்ச்சி செயல்..!


ஊரடங்கால் தான் கஷ்டப்பட்ட நிலையிலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் 100 ரூபாயை இணைத்து வழங்கிய பெண் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

கேரள மாநிலம் எர்ணாகுலம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய உணவுப் பொட்டலத்தோடு நூறு ரூபாய் பணத்தையும் செலவுக்கு வைத்து அனைவரையும் நெகிழச்செய்துள்ளார் பெண் ஒருவர்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளம், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில்தான் எர்ணாகுலம், கும்பலங்கி கிராமத்தில் வசிக்கும் மேரி செபஸ்டியன் எனும் பெண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைத்தார்.

தனது வீட்டில் தயாரிக்கும் உணவுப் பொட்டலங்களுடன் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று உணவுப் பொட்டலங்களைச் சேகரித்துப் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்கும் அறப்பணியை செய்தார். இத்துடன் யாருக்கும் தெரியாமல், உணவுப் பொட்டலத்துக்குள் நூறு ரூபாய் நோட்டையும் செல்லோடேப் சுற்றிப் பாதுகாப்பாக வைத்துக் கொடுத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் மேரி செபஸ்டியன் கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துள்ளார். அதற்குள் நூறு ரூபாய் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவர் உடனே தனது நண்பர்களிடமும் போன் செய்து கேட்டுள்ளார். அவர்களும் உணவுப் பொட்டலத்துக்குள் நூறு ரூபாய் இருப்பதை ஆச்சரியத்துடன் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் உணவு வழங்கியது யார் என்று தேடியபோதுதான் மேரி செபஸ்டியனைக் கண்டுபிடித்துள்ளனர். இப்போது, மேரி செபஸ்டியனின் மனிதாபிமான உதவியைப் பாராட்டி பரிசளித்து வருகிறார்கள் கேரள மக்கள்.

“என்னால் முடிந்த மிகச்சிறிய அளவில் மக்களுக்கு உதவ நினைத்தேன். எனக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இங்கு கடுமையான குளிர் நிலவி வருவதால் பலரும் டீ குடிப்பர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வைத்த பணம் டீ குடிக்கவாவது உதவும் என்று நினைத்தேன். உணவுப் பொட்டலத்துக்குள் நூறு ரூபாய் வைத்தது நான்தான் என்று யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது” என்கிறார் மேரி செபஸ்டியன்.

போலீசாரால் பாராட்டு பெறும் மேரி செபஸ்டியன்

தற்போது மேரியும் அவரின் கணவர் செபஸ்டியன் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்துள்ளார். கடந்த மாதம் 15 நாள்கள் மட்டுமே மேரி வேலை செய்துள்ளார். அந்த சம்பளத்தை வாங்கிதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார், மேரி செபஸ்டியன். அவரது மனிதாபிமானத்தைப் பாராட்டி அவருக்குப் பலரும் இப்போது பரிசளித்து வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!