கோழிக்கோடு விமான விபத்துக்கு என்ன காரணம்..? – வெளியான அதிர்ச்சித் தகவல்கள்


கோழிக்கோழி விமான விபத்திற்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்து நிலையில் பலர டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியுள்ள இந்த விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும்தான் காரணம் என்று கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் கடைசிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான விபத்து குறித்து, கரிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ‘அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான, நெறிமுறைகள் மீறப்பட்டதால்தான் விமான விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்தும் தற்போது விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.

விமான விபத்து ஏற்படுவதற்கு முன்னதாகவே விமானி என்ஜினை நிறுத்திவிட்டதாகவும், அதனாலேயே விமானத்தில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது என்றும் தகவல்கள் பரவின. இந்தத் தகவலில் உண்மை இல்லை என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். விமானம் 35 அடி பள்ளத்திலிருந்து கீழே விழுந்து இரண்டாக உடையும்வரை இன்ஜின் இயங்கியிருக்கிறது.

இந்த விபத்தில் புதிய திருப்பமாக, விமானி தன்னிச்சையாக விமான நிலையத்தின் மேற்குப்புறம் உள்ள 10-ம் எண் ஓடுதளத்தை தவறாகத் தேர்ந்தெடுத்ததுதான் விபத்துக்குக் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குப் பக்கம் உள்ள 28-ம் எண் ஓடுதளம்தான் விமான நிலையத்தின் முதன்மையான ஓடுதளமாகும். வழக்கமாக, இந்த ஓடுதளம்தான் மோசமான வானிலை நிலவும்போதும் பயன்படுத்தப்படும்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தரவுப்படி 28-ம் எண் ஓடுதளத்தில்தான் விமானத்தைத் தரையிறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மழை காரணமாக ஓடுதளம் சரியாகப் பார்வைக்குத் தெரியாததால் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானி மீண்டும் டேக் ஆஃப் செய்து பறந்துள்ளார்.

இதையடுத்து, இரண்டாவது முயற்சியாக விமானியே தன்னிச்சையாக முடிவெடுத்து 10-ம் ஓடுதளத்தில் தரையிறங்கினார். போயிங் 747 – 800 ரக விமானம் 15 நாட்டிகல் மைல் காற்று வேகத்திலும் தாக்குப்பிடிக்கும் என்பதால் விமானி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால், விமானி எதிர்பார்த்தபடி விமானத்தின் வேகம் குறையவில்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தைத் தவிர்க்க மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளார். விமானியின் இந்த அதீத தன்னம்பிக்கையே விமான விபத்துக்குக் காரணம் என்று கருப்புப்பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 2017-ம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட் விமானம் இதே 10-ம் எண் விமான ஓடுதளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் இறக்கைகள் கீழே உரசியது. 10-ம் எண் ஓடுதளம் சாய்வாகவும், சற்று மேடு பள்ளமாகவும் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!