3 ஆயிரம் ரூபாய்க்காக மீனவருக்கு நடந்த கொடூரம்… கன்னியாகுமரி அருகே பயங்கரம்..!


3 ஆயிரம் ரூபாய்க்காக மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மீனவரின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி அருகே நடந்த இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கன்னியாகுமரி அருகே கோவளம் டி.சி.நகரைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் ரதிஸ்டன் (வயது 37), மீனவர். இவர் அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய உறவினர்கள் சகாய நிர்மல், வசந்த் ஆகியோருடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

சில தினங்களுக்கு முன்பு சகாய நிர்மல், வசந்த் ஆகியோர் விசைப்படகு உரிமையாளரிடம் இருந்து முன்பணமாக ரூ. 3 ஆயிரம் வாங்கி ரதிஸ்டனிடம் கொடுத்தனர். பின்னர், ரதிஸ்டன் வேலைக்கு செல்லவில்லை. அத்துடன் பணத்தையும் திருப்பி கொடுக்க முடியவில்லையாம்.

சகாயநிர்மல் பலமுறை கேட்டு பார்த்தும், ரதிஸ்டன் பணத்தை கொடுத்ததாக இல்லை. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் சகாய நிர்மல், தனது உறவினர் வசந்த் (36) என்பவரை அழைத்துக் கொண்டு ரதிஸ்டன் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் ரதிஸ்டன் மனைவி, பிள்ளைகளுடன் அமர்ந்து இருந்தார். சகாய நிர்மல் வருவதை கண்டதும் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் 3 பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.

பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சகாய நிர்மல், வசந்த் இருவரும் ரதிஸ்டனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் ரதிஸ்டன் அலறினார். கணவரது அலறல் சத்தம் கேட்டு அவருடைய மனைவி சரோஜினி (34) ஓடி வந்தார். அதற்குள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

ரதிஸ்டன் பலத்த காயத்துடன் துடிதுடித்தார். அவருடைய மனைவி கணவரை கை தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்தார். இரவில் இருவரும் தூங்கி விட்டனர். காலையில் ரதிஸ்டன் நீண்டநேரம் ஆகியும் எழும்பவில்லை. மனைவி, எழுப்ப முயன்ற போது அவர் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரதிஸ்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, ரதிஸ்டனை கொலை செய்ததாக சகாய நிர்மல், வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 3 ஆயிரம் ரூபாய்க்காக மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!