கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலால் நடந்த களேபரம்..!


ஈக்வடார் நாட்டில் உள்ள அமேசான் பழங்குடிகள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக்கோரி ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரை கடத்திச்சென்றனர். இதனால், புதைத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு பழங்குடி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகே அமைந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் இந்நாட்டை சுற்றி அமைந்துள்ளது. இந்த காடுகளின் பகுதிகளில் பல்வேறு வாழ்வியல் அமைப்புகளை கொண்ட அமேசான் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா அமேசான் பகுதிகளிலும் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக பிரேசில், ஈக்வடார் போன்ற நாடுகளில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மழைக்காடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களும் கொரோனாவுக்கு இலக்காகி வருகின்றனர்.

இந்நிலையில், ஈக்வடார் நாட்டின் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின் தலைவர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த தலைவரின் உடலை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியில் வசித்து வந்த அமேசான் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரை கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் நடைமுறைப்படி அடக்கம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈக்வடார் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள், 2 போலீசார், 2 பொதுமக்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய அதிகாரிகள் தரப்பில் இருந்து பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் தங்கள் தலைவரின் உடலை தந்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுதலை செய்வோம் என பழங்குடியின மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியின்றி கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் தோண்டி எடுத்து அம்மக்களிடம் ஒப்படைத்தனர்.

தங்கள் தலைவரின் உடலை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் பிடித்து வைத்திருந்த ராணுவ வீரர்கள் உள்பட 6 பிணைக்கைதிகளை விடுதலை செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!