2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்… அதிர வைத்த தகவல்..!


ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த 2 மாதங்களில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளன.

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் மொத்தம் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகள் எப்படி உயிரிழந்துள்ளன என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை ஆகையால் இவை வேட்டையாடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு உயிரிழந்துள்ளன.

இதனால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று யானைகளுக்கும் பரவி இருக்கலாம் எனவும் அதனால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் கருதுகின்றனர்.

இதற்கிடையில், சில யானைகள் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதாகவும், அவைகளால் தங்கள் பாதைகளை எதே காரணத்தால் மாற்ற முடியவில்லை என சரணாலயத்தை ஆய்வு செய்த விலங்குகள் நல ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைகாக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என போட்ஸ்வானா வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்கா இயக்குனர் டாக்டர்.சைரில் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள் அடுத்த சில வாரங்களில் வரலாம் எனவும், அப்போது தான் யானைகளின் மரணம் தொடர்பான உண்மையான காரணம் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!